ALAM SEKITAR & CUACANATIONALPENDIDIKAN

சரவா சிவப்பு மண்டலங்களில் உள்ள பள்ளிகள் இரு வாரங்களுக்கு மூடப்படும்

கூச்சிங், ஏப் 19- கோவிட்-19 நோய்ப்பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் சரவா மாநிலத்தின் சிவப்பு மண்டலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை தொடங்கி இரு வாரங்களுக்கு மூடப்படும்.

பள்ளிகள் மூலம்  பரவிய இந்த  நோய் தொற்றினால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெறோர்கள் பாதிக்கப்படும் சாத்தியத்தை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநில முதலமைச்சர் டத்தோ பாத்திங்கி அபாங் ஜோஹரி துன் ஓப்பேங் கூறினார்.

மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிவப்பு மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட சரவா அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என்றார் அவர்.

இங்குள்ள விஸ்மா பாப்பா மலேசியாவில் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை அமலாக்க நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

தினசரி கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 508ஐ எட்டிய நிலையில் சரவா மாநிலத்தின் 18 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அல்லாமல் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை சரவா அமல்படுத்தியது ஏன் என்ற கேள்விக்கு, மாநில  பேரிடர் மேலாண்மை குழு மேற்கொண்ட ஆய்வில் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையை தற்போதைக்கு அமல் செய்வது சாத்தியமற்றது எனத் தெரியவந்ததாக அவர் பதிலளித்தார்.


Pengarang :