MEDIA STATEMENTNATIONAL

ஆடவரை காரிலிருந்து இழுத்து கட்டையால் தாக்கினர்- கிள்ளான், செந்தோசாவில் சம்பவம்

ஷா ஆலம், ஏப் 19- ஆடவர் ஒருவரை காரிலிருந்து இழுத்து கட்டையால் தாக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கிள்ளான், தாமான் செந்தோசாவில் நேற்று மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் சந்தேகப் பேர்வழிகளை அன்று இரவே கைது செய்தனர்.

உறவினர் ஒருவருடன் அந்த ஆடவர் பயணம் செய்த காரை நான்கு ஆடவர்கள் பயணம் செய்த ஹோண்டா சிவிக் கார் ஒன்று  பின்புறமாக மோதியதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சம்சுல் அமார் ரம்லி கூறினார்.

அந்த ஹோண்டா சிவிக் காரிலிருந்த கும்பல்  அந்த ஆடவரின் கார் கண்ணாடியை உடைத்து அவரை வெளியே இழுத்து கட்டையால் தாக்கியதோடு உறவினர் வசமிருந்த கைப்பேசியையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இரு காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் இதன் தொடர்பான இரு புகார்களை  தாங்கள் பெற்றதாக அவர் மேலும் சொன்னார்.

நேற்று இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 23 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட அந்த நான்கு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.

அந்த நால்வர் மீதும் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர்கள் ஷாபு வகை  போதைப் பொருளைப் பயன்படுத்தியிருந்தது தெரியவந்ததாக கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல்  சட்டத்தின்  394 மற்றும் 427 சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்..

 


Pengarang :