ECONOMYMEDIA STATEMENTPBT

2030ஆம் ஆண்டிற்குள்  60% பொது போக்குவரத்து  இலக்கை அடைய அரசு நம்பிக்கை

சுபாங் ஜெயா, ஏப் 26– அறுபது விழுக்காட்டினர் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை உறுதி செய்யும் போக்குவரத்து பெருந்திட்டத்தின் இலக்கை வரும் 2030ஆம் ஆண்டிற்குள் அடைய முடியும் என சிலாங்கூர் மாநில அரசு நம்புகிறது.

பொதுமக்கள்  பொது போக்குவரத்து வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இதுதவிர, பொது போக்குவரத்து  பயணிகளின் முதன்மை தேர்வாக இருப்பதை உறுதி செய்வதற்காக பல்வேறு வசதிகளையும் அரசு ஏற்படுத்தி தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உதாரணத்திற்கு, இங்கு திறக்கப்பட்ட குடியிருப்பு பகுதியையும் எல்.ஆர்.டி. ரயில் நிலையத்தையும் இணைக்கும் நடைபாதையை குறிப்பிடலாம்.  இத்திட்டத்திற்கு இருபதாயிரம் வெள்ளிக்கும் குறைவாகவே செலவு பிடித்துள்ள போதிலும் அது அளப்பரிய பயனைத் தருகிறது என்றார் அவர்.

அந்த போக்குவரத்து பெருந்திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டதாக கூறிய அவர், தற்போது 40 விழுக்காட்டினர் மட்டுமே பொது போக்குவரத்தை பயன்படுத்தும் காரணத்தால் சாலை நெரிசல்  நகர்ப்புறங்களில் இன்று வரை தீர்க்க முடியாத பிரச்னையாக இருந்து வருவதாகச் சொன்னார்.

இங்குள்ள யுஎஸ்ஜே 13/2 சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 140 மீட்டர் நீள நடைபாதையை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :