ECONOMYPBTSELANGOR

 கோத்தா ராஜா தொகுதியில் இலவச பஸ் சேவை அமலாக்கம்

ஷா ஆலம், மே 1– பொதுமக்களின் வசதிக்காக ஸ்மார்ட் சிலாங்கூர் எனப்படும் இலவ பஸ் சேவையை சிலாங்கூர் அரசு கோத்தா ராஜா  தொகுதிக்கும் விரிவு படுத்தியுள்ளது.

சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவை உட்படுத்திய எஸ்09 எனும் தடத்திற்கான இச்சேவை இன்று தொடங்கி அதிகாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் கூறினார்.

புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வசதிக்காக ஷா ஆலம் மாநகர் மன்றம் உருவாக்கியுள்ள போக்குவரத்து திட்டம் இதுவாகும். இத்திட்டம் வட்டார பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுக பங்காற்றும். கிராமப்புறங்களுக்கு ஏற்ற வகையிலான சிறிய பஸ்கள் இத்தடத்தில் பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.

இந்த இலவச பஸ் திட்டத்தை இன்று தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார், கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சாபு, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.கணபதிராவ்,  சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான முகமது ஜவாவி முக்னி, ஷா ஆலம் மாநகர் மன்ற இடைக்கால டத்தோ பண்டார் முகமது ரஷிடி ருஸ்லான் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த பஸ் சேவை புக்கிட் ரீமாவ் ஏயோன் பேரங்காடியில் தொடங்கி  செக்சன் 32, கம்போங் ஜாலான் கெபுனில் முடிவுறும். 45 பயணிகளை ஏற்றக்கூடிய  நான்கு பஸ்கள் 15 முதல் 25 நிமிட இடைவெளியில் சேவையை மேற்கொள்ளும் என்று இங் ஸீ ஹான் கூறினார்.

சுமார் 11 லட்சம் வெள்ளி ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் ஷா ஆலம் மாநகர் மன்றம் இந்த இலவச  பஸ் சேவைத் திட்டத்தை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :