ECONOMYSELANGOR

35 லட்சம் தொழிலாளர்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்கள்- சிலாங்கூர் மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், மே 1– சிலாங்கூரிலுள்ள 35 லட்சம் தொழிலாளர்களுக்கு குறிப்பாக கோவிட்-19 நோய்த் தொற்று பரவலுக்குப் பின்னர் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப் பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தின் மேம்பாட்டிற்கு தொழிலாளர் வர்க்கம் முதுகெலும்பாக  விளங்குவதால் அவர்களின் வாழ்வியல் மற்றும் பொருளாதாரம் சமநிலையாக இருப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

இதன் காரணமாகவே அரசாங்கம் ‘பொய்ஸ்‘ எனப்படும் வேலையிட நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளது. வேலையிடங்களில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் தொழில்துறைகள்  தங்கள் பொருளாதார நடவடிக்கைகளை சீராக மேற்கொள்வதற்கும் இந்நடவடிக்கை துணை புரிந்துள்ளது என்றார் அவர்.

நோய்த் தொற்றுக்கு பிந்தைய பொருளாதார நெருக்கடியிலிருந்து தொழிலாளர் வர்க்கம் மீட்சி காண்பதற்கு ஏதுவாக பரிவு சிலாங்கூர்  மீட்சித் திட்டம் 1,2 மற்றும் 3 ஆகியவற்றையும் கித்தா சிலாங்கூர் திட்டத்தையும்  மாநில அரசு அமல்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உற்பத்தி, சேவை, கட்டுமானம், சுகாதாரம் ஆகியத் துறைகளில் தொழிலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது. அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள். உங்கள் சேவைக்கும் தியாகத்திற்கும் நன்றி என அவர் கூறினார்.


Pengarang :