ECONOMYPBTSELANGOR

விற்பனை செய்ய இயலாத விவசாய பொருள்களை வாங்கத் தயார்- சிலாங்கூர் அரசு அறிவிப்பு

ஷா ஆலம், மே 9- ஹைட் எனப்படும் ஆக்ககர நிர்வாகத்திற்கான வெப்பத் திட்டு பகுதிகளை அடையாளம் காணும் முறையின் கீழ் பட்டியலிட்டு வர்த்தக நடவடிக்கைகள் மூடப்பட்ட கடைகளில் உள்ள விவசாயப் பொருள்களை வாங்கிக் கொள்ள சிலாங்கூர் மாநில அரசு தயாராக உள்ளது.

இவ்விகாரத்தை மாநில அரசு அணுக்கமாக கண்காணித்து வருவதோடு உரிய நடவடிக்கைளை எடுப்பதிலும் தீவிரம் காட்டி வருவதாக விவசாய அடிப்படை தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.

கடந்த காலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட போதும் இதே போன்ற நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டதாகவும் அவர் சொன்னார்.

அண்மையில் கூட 4 டன் வாழைப்பழங்களை 8,000 வெள்ளி விலையில் வாங்கி பாசார் தானியில் சிறப்பு விலையில் விற்பனை செய்தோம் என்றார் அவர்.

ஹைட் முறையின் கீழ் பட்டியலிடப்பட்ட இடங்களில் உள்ள வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு மாநில அரசு எவ்வாறு உதவும் என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அடுத்த ஏழு நாட்களில் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளவை என அடையாளம் காணப்பட்ட 54 இடங்களின் பட்டியலை சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்டது.


Pengarang :