ECONOMYNATIONAL

இலவச பரிசோதனையில் நோய் கண்டறியப்பட்ட 80 விழுக்காட்டினரிடம் நோய்க்கான அறிகுறி இல்லை

பாங்கி, மே 9- சிலாங்கூர் மாநிலத்தில்  மேற்கொள்ளப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனையின் போது நோய் உறுதி செய்யப்பட்டவர்களில் 80 விழுக்காட்டினரிடம் நோய்த் தொற்று பீடிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை.

நோய்க்கான அறிகுறியைக் கொண்டிராத இத்தகைய நபர்களை முன்கூட்டியே அடையாளம் காணாது போனால் சமூகத்தில் நோய்த் தொற்று விரைவாக பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கிளினிக் செல்கேர் நிர்வாகி  முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

இந்த பரிசோதனை இயக்கம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை நோய்த் தொற்றுக்கான அறிகுறியைக் கொண்டிராத 80 விழுக்காட்டினரை அடையாளம் கண்டுள்ளோம் என்றார் அவர்.

இது கவலையளிக்கும் விஷயமாகும். இத்தகைய தரப்பினரை பரிசோதனைக்கு உட்படுத்தாவிட்டால் சமூகத்தில் நோய்த் தொற்று விரைவாக பரவுவதற்குரிய வாய்ப்பு உள்ளது என்று அவர் சொன்னார்.

பண்டார் பாரு பாங்கியில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசு இம்மாதம் 8ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை தினசரி இரு தொகுதிகள் வீதம் மாநிலத்திலுள்ள 56 தொகுதிகளிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது.


Pengarang :