ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோவிட்-19 பரிசோதனை- சிலாங்கூரில் 1,171 பேருக்கு நோய்த் தொற்று கண்டுபிடிப்பு

ஷா ஆலம், மே 21– சிலாங்கூரில் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் தொடங்கிய இரு வார காலத்தில் அந்நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என நம்பப்படும் 1,171 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 8ஆம் தேதி தொடங்கி கோம்பாக் மற்றும் உலு லங்காட் மாவட்டங்களில் உள்ள 14 சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இலவச பரிசோதனை இயக்கங்கள் வாயிலாக இந்த எண்ணிக்கை கண்டு பிடிக்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநில அரசினால் நடத்தப்படும் அந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் நேற்று வரை  இருபதாயிரம் பேர் பங்கேற்றுள்ளனர் என்று அவர் சொன்னார்.

நோய்த் தொற்றைத் துண்டிக்கவும் நோய்த்  தொற்று இருப்பதற்கான எந்த அறிகுறியையும் கொண்டிராதவர்களை கண்டறியும் நோக்கிலும் மாநில அரசு இந்த பரிசோதனை இயக்கத்தை நடத்தி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த பரிசோதனை இயக்கம் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணமாக இருந்தாலும் நோய்க்கான அறிகுறியைக் கொண்டிராதவர்களால் பிறருக்கும் நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் இத்திட்டத்தை தொடர தாங்கள் உறுதிபூண்டுள்ளதாக  அவர்  கூறினார்.

நோன்பு பெருநாளுக்கு  முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் வழி இதுவரை 19,858 பேர் சோதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 5.8 விழுக்காட்டினர் அந்நோய்த் தொற்றுக்கான அறிகுறியை கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :