ECONOMYHEALTHMEDIA STATEMENTSELANGOR

பொது முடக்கம் தடையில்லை. இலவச கோவிட்-19 பரிசோதனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கிள்ளான், ஜூன் 1– இன்று தொடங்கி அமல் செய்யப்பட்ட முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை சிலாங்கூர் அரசின் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்திற்கு எந்த வகையிலும் தடையாக அமையவில்லை.

கோத்தா கெமுனிங் மற்றும் சுங்கை காண்டீஸ் தொகுதிகளில் இன்று நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்பதற்கு செலங்கா செயலி வாயிலாக சார் 7,000 பேர் பதிவு செய்திருந்ததாக எஸ்.டி.எப்.ஒ. எனப்படும் சிலாங்கூர் மாநில நடவடிக்கை பணிக்குழு கூறியது.

டேவான் சுங்கை கிளாங்கில் நடைபெற்ற பரிசோதனை இயக்கத்தில் 3,800 பேர் பங்கு கொண்ட வேளையில் கோத்தா கெமுனிங் மண்டபத்தில் நடைபெற்ற பரிசோதனை இயக்கத்தில் எஞ்சியோர் கலந்து கொண்டதாக அந்த பணிக்குழுவின் இயக்குநர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ரோஸ்லி கூறினார்.

செலங்கா செயலி வாயிலாக 7.000 பேர் பதிவு செய்துள்ளனர். இது தவிர மேலும் 5,000 பேர்  நேரடியாக கலந்து கொள்வர் என எதிர்பார்க்கிறோம் என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக இந்த பரிசோதனை இயக்கம் ஒத்தி வைக்கப்படும் என பலர் கருதியிருக்கக்கூடும்.. எனினும். இவ்வியக்கம் தொடரப்படுவதை அறிந்தவர்கள் இன்று பின்னேரம் அதிகளவில் வரக்கூடும் என்றார் அவர்.

நோய்த் தொற்றை தடுக்கும் முயற்சியாக மேற்கொள்ளப்படும் இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்திற்கு தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதியளித்துள்ளது குறித்து நாங்கள் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :