ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மோசடி கும்பலுக்கு எதிராக விழிப்புடன் இருப்பீர்- பொதுமக்களுக்கு வருமான வரி வாரியம் நினைவுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 8– கவனக் குறைவாக இருப்பவர்களை தங்கள் வலையில் சிக்க வைக்க காத்திருக்கும் மக்காவ் மோசடிக் கும்பலுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களை உள்நாட்டு வருமான வரி வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாண்டு ஜனவரி  முதல் தேதி தொடங்கி மே 27ஆம் தேதி வரை நிகழ்ந்த 1 கோடியே 52 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி சம்பந்தப்பட்ட 556 மோசடி சம்பவங்கள் தொடர்பில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அது கூறியது.

வழக்கமாக இக்கும்பலின் உறுப்பினர்கள் பொது மக்களை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு தங்களை உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொள்வார்கள் என்று வருமான வரி வாரியத்தின் அறிக்கை தெரிவித்தது.

உங்கள் நிறுவனம் இன்னும் வரி பாக்கியைச் செலுத்தாமல் உள்ளது என அந்த சந்தேகப் பேர்வழி கூறுவான். இந்த தொலைபேசி அழைப்பினால் குழப்பமடையும் பாதிக்கப்பட்ட நபர்  அதனை மறுப்பார். உடனே அந்த தொலைபேசி இணைப்பு வேறொரு நபருக்குச் செல்லும். தன்னை போலீஸ் அதிகாரி, பேங்க் நெகாரா அல்லது வேறு அமலாக்கத் துறையின் அதிகாரி என அடையாளம் கூறிக் கொள்ளும் அந்த ஆடவன் இவ்விவகாரம் தொடர்பில் புகார் செய்யச் சொல்லி பாதிக்கப்பட்ட நபரை மிரட்டுவான்.

அதோடு நின்று விடாமல், சட்டவிரோத பண பரிமாற்றம், போதைப் பொருள் கடத்தல் மற்றும் இதர குற்றச்செயல்களுடன் பாதிக்கப்பட்ட நபரை தொடர்பு படுத்துவான். பாதிக்கப்ப்ட்ட நபர் அச்சத்திலும் குழப்பத்திலும் TAC/OTP  எண் உள்ளிட்ட வங்கித் தகவல்களை அவ்வாடவனிடம் கொடுத்து விடுவார்.

தனது வங்கிக் கணக்கிலுள்ள பணம் மூன்றாம் தரப்பின்  வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டப் பின்னரே தாம் ஏமாற்றப்பட்டதை சம்பந்தப்பட்ட நபர் உணர்வார். அதன் பிறகு சந்தேகப் பேர்வழியிடமிருந்து எந்த தொலைபேசி அழைப்பும் வராது.

ஆகவே, தாங்கள் பெறும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல் தொடர்பில் வருமான வரி வாரியத்துடன் தொடர்பு கொண்டு  விளக்கம் பெறும்படி அந்த வாரியம் கேட்டுக் கொண்டது.


Pengarang :