ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

இல்லத்தரசிகளை தொழில்முனைவோர் ஆக்கும் திட்டம்- பெர்மாத்தாங் உறுப்பினர் முன்னெடுப்பு

ஷா ஆலம், ஜூன் 19- இல்லத்தரசிகள் அதிக வருமானம் ஈட்டுவதற்குரிய வழிகளை ஏற்படுத்தித் தருவதை பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் ரோசானா ஜைனால் அபிடின் தனது இலக்காக கொண்டுள்ளார்.

குடும்பப் பெண்களில் பலர் தற்போது வருமானம் ஈட்ட வழியில்லாத நிலையில் இருந்தாலும் சுய காலில்  நிற்பதற்கு வருமானமின்மை ஒரு போதும் தடையாக இருக்காது என அவர் கூறுகிறார்.

பல பெண்கள் வர்த்தகம் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டி வளமான வாழ்வை அமைத்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

பெர்மாத்தாங் தொகுதியில் உள்ள பல பெண்கள் ஆக்கத்திறன் கொண்டவர்களாக உள்ளனர். அவர்கள் வீட்டிலிருந்தவாறு உபரி வருமானத்தை தேடிக் கொள்கின்றனர். பெரும்பாலோர் உணவுத் தயாரிப்புத் துறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பலர் பயன்படுத்தப்படாத பொருள்களைப் பயன்படுத்தி கைவினைப் பொருள்களை தயாரிக்கின்றனர் என்றார் அவர்.

கூடுதல் பயிற்சிகள் மற்றும் நிதியுதவி மூலம் அவர்களின் ஆற்றலை மேம்படுத்துவது தனது தலையாய பணியாகும் என்று ரோசானா மேலும் சொன்னார்.

நாங்கள் நிதியுதவி வழங்குவதோடு  வர்த்தக லைசென்ஸ் பெறவும் உதவி செய்கிறோம். இதுதவிர தொகுதி சேவை மையத்தின் வாயிலாக பல்வேறு பொது அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு திட்டங்களையும் அமல் படுத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

வர்த்தகத்தில் குறிப்பாக உணவு தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் சுத்தம், சுகாதாரம், தரம், மதிப்பு ஆகிய நான்கு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :