ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

அனுமதியின்றி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8.9 டன் மீன் தீவனம் பறிமுதல்

ஷா ஆலம், ஆக 14- முறையான அனுமதியின்றி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8,938 கிலோ மீன் தீவனத்தை மக்கிஸ் எனப்படும் மலேசிய தனிமைப்படுத்துதல் மற்றும் சோதனை சேவைத் துறையின் சிலாங்கூர் மாநிலப் பிரிவினர் மேற்கு கிள்ளான் துறைமுகத்தில் பறிமுதல் செய்தனர்.

அத்துறை மேற்கொண்ட வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது 98,466.73 வெள்ளி மதிப்பிலான மீன் தீவனம் அடங்கிய கொள்கலன் பறிமுதல் செய்யப்பட்டதாக அத்துறை கூறியது.

அந்த பதப்படுத்தப்பட்ட மீன் உணவுப் பொருளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி மக்கிஸ் துறையிடமிருந்து பெறப்படவில்லை என்பது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

இச்சம்பவம் தொடர்பில் 2011 ஆம் ஆண்டு மலேசிய தனிமைப்படுத்துதல் மற்றும் சோதனை சேவைச் சட்டத்தின் 11(1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் இச்சட்டத்தின் கீழ் குற்றம் புரிவோருக்கு ஆறாண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் வெள்ளி வரையிலா அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் அவ்வறிக்கை தெரிவித்தது. 


Pengarang :