ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

விரைவான மற்றும் மலிவான விலையில் சிலாங்கூர் இணைய தரவுத் திட்டம்

ஷா ஆலம், ஆக 14- நடுத்தர வருமானம் பெறும் எம்40 பிரிவினருக்கு வழங்கப்படும் இணையத் தரவு திட்டம் அதிவிரைவான சேவையை வழங்கும் அதேவேளையில் மலிவான கட்டணத்தையும் கொண்டிருப்பதாக அத்திட்ட ஒருங்கிணைப்பாளர் அகமது அய்ஸாட் அப்துல் ரஹ்மான் கூறினார்.

அதிவிரைவு இணையச் சேவை நகர்ப்புறங்களில் மட்டுமின்றி உலு சிலாங்கூர், கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம் போன்ற புறநகர்ப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

டெலிகோம் மலேசியாவுடன் இணைந்து இத்திட்டத்தை நாங்கள் அமல்படுத்தி வருகிறோம். மாநிலத்தின் 90 விழுக்காட்டு பகுதிகளில் இணையச் சேவைக்கான ஒருங்கமைப்பைக் கொண்டுள்ளதால் அந்நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறோம் என்றார் அவர்.

நாடு கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டது முதல் இணையச் சேவை நமக்கு அத்தியாவசியமான தேவையாகிவிட்டது. நியாயமான விலையில் மாநில அரசு வழங்கும் இந்த இணையத் தரவு திட்டம் நடுத்தர வருமானம் பெறும் எம்40 பிரிவினர் உள்பட அனைத்து  தரப்பினருக்கும் பயன் தரும் என்று அவர் மேலும் சொன்னார்.

எட்டு வித தொகுப்புகளை உள்ளடக்கிய இந்த இணைய தரவு சேவை கட்டணக் கழிவுடன் ஓராண்டு காலத்திற்கு வழங்கப்படுவதாக கூறிய அவர், இத்திட்டத்திற்கு இதுவரை 132 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என்றார்.

இந்த இணையத் தரவு திட்டம் குறித்து விரிவான அளவில் விளக்கமளிப்பதற்காக மாநிலத்திலுள்ள அனைத்து  சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுடன் சந்திப்பு நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் விநாடிக்கு 30 முதல் 300 மெகாஹிட் வேகம் கொண்ட இணைய தரவு சேவை வெ 10 முதல் வெ.30 வரையிலான கட்டணத்தில் வழங்கப்படுகிறது. 


Pengarang :