ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை- கிள்ளான் மருத்துவமனை தீவிர, உடனடி நடவடிக்கை

கிள்ளான், ஆக 15– கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய சுகாதார அமைச்சு பல்வேறு தீவிர மற்றும் உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாநில மருத்துவமனையாகவும் கோவிட்-19 மற்றும் கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சைளிக்கும் கலப்பு சிகிச்சை மையமாகவும் விளங்கும் இம்மருத்துவமனையில் தற்போதுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 1,098 பேராகும் என்று சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ முகமது ஷபிக் அப்துல்லா கூறினார்.

நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையை வழங்குவதற்கு ஏதுவாக இம்மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மற்றும் உபகரணங்கள் ரீதியாக பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் நிலைமை தொடர்பில் இம்மாதம் 11 ஆம் தேதி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ எழுதிய கடிதம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து விவரித்த அவர், கடந்த 11 ஆம் தேதி வரை 27 கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள வேளையில் நோயாளிகளின் எண்ணிக்கையைச் சமாளிப்பதற்கு ஏதுவாக நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுதாக அவர் குறிப்பிட்டார்.

அவசர காலத் தேவையின் அடிப்படையில் வெண்டிலேட்டர், கட்டில்கள், நோயாளிகளுக்கான மானிட்டர் கருவிகள், இரத்த த்தில் குளுகோஸ் அளவைக் கண்டறியும் கருவில் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் சுகாதார அமைச்சு 5 கோடியே 73 லட்சம் வெள்ளி கூடுதல் ஒதுக்கீட்டை அங்கீகரித்ததாகவும் அத்தொகையில் 92 லட்சத்து 50 வெள்ளி கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :