Yang di-Pertuan Agong Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பக்கத்தான் ஹராப்பான்-மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்- மாமன்னர் மகிழ்ச்சி

கோலாலம்பூர், செப் 15- உருமாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகிய விவகாரங்களை மையமாக கொண்டு மத்திய அரசும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியும் கடந்த திங்களன்று செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசியல் நெருக்கடிக்கு முடிவுகட்டும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் அரசியல் சித்தாங்களை ஒதுக்கி விட்டு கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் நலனை  காப்பதற்கும் பாடுபடுவர் என்று பேரரசர் எதிர்பார்ப்பதாக இஸ்தானா நெகாராவின் சிறப்பு அதிகாரி டத்தோ அகமது பாடில் சம்சுடின் கூறினார்.

இம்மாதம் 13ஆம் தேதி கையெழுத்தான உருமாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை மீதான கட்சி எல்லை கடந்த வரலாற்றுப் பூர்வ ஒப்பந்தம் குறித்து மாமன்னர் மனநிறைவும்  மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாடும் மக்களும் பல்வேறு சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வரும் வேளையில்  முடிவே இல்லாத அரசியல் நெருக்கடிகள் மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்துவது சரியானதல்ல என்று மாமன்னர் கருதுகிறார் என்று அறிக்கை ஒன்றில்  டத்தோ அகமது பாடில் தெரிவித்தார்.

நாடு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் திறனும் விவேகமும் கொண்டு நிலையான அரசாங்கத்தை உருவாக்குவது அவசியமானது என்ற மலாய் ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புகேற்ப இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :