ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூர் மக்களுக்கு 10,000 சுற்றுலா பற்றுச் சீட்டுகள் விநியோகம்

ஷா ஆலம், செப் 21-  வரும் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள சிலாங்கூர் அரசின் சுற்றுலாப் பற்றுச் சீட்டு 2.0 திட்டத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு மாநில மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தலா 100 வெள்ளி மதிப்பிலான 10,000 இலவச பற்றுச் சீட்டுகளை ஷாப்பி மின்- வணிகத் தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று சுற்றுலா துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

இந்த இலவச பற்றுச் சீட்டு திட்டம் வரும் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படும். சிலாங்கூர் மாநில மக்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படும் இந்த பற்றுச் சீட்டுகளை உடனடியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

தற்போது மாநில எல்லைகளை கடக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் மாநிலத்தில் சுற்றுலா நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில் இந்த பற்றுச் சீட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய மீட்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு சிலாங்கூர் மாறியதைத் தொடர்ந்து மாநிலத்தில் சுற்றுலா நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் 10,000 இலவச பற்றுச் சீட்டுகள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக இங் ஸீ ஹான் இம்மாதம் 9 ஆம் தேதி கூறியிருந்தார்.

தலா 100 வெள்ளி மதிப்புள்ள இந்த பற்றுச் சீட்டுகளை விநியோகிக்க மாநில அரசு 10 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்டத் இலவச பற்றுச் சீட்டு திட்டத்தின் கீழ் 20 லட்சம் பற்றுச் சீட்டுகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

Pengarang :