MEDIA STATEMENTNATIONALSELANGOR

மேம்பாட்டாளர் மாற்றப்பட்டால் டுசுன் டுரியான் வீடமைப்பு விவகாரத்தில் மாநில அரசு தலையிடும்

ஷா ஆலம், அக் 16- மேம்பாட்டாளர் மாற்றப்படும் பட்சத்தில் முன்னாள் டுசுன் டுரியான் தோட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் பிரச்னையைத் தீர்க்க மாநில அரசு உதவி புரியும்.

தற்போதைக்கு மேம்பாட்டாளரும் வீடு வாங்கியோரும் பவர் ஆஃப் அட்டர்னி எனப்படும் அதிகார மாற்றக் கடிதம் மற்றும் விற்பனை கொள்முதல் ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டுள்ளதாக வீடமைப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

இரு தரப்பினரும் இப்பிரச்சனைக்கு சட்ட ரீதியாக அதாவது நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று மாநில அரசு பரிந்துரைத்துள்ளதாக அவர் சொன்னார்.

தற்போது குடியிருப்பாளர்களின்  19 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளித் தொகையை அந்த மேம்பாட்டு நிறுவனம் முன்பணமாக தன்வசம் வைத்துள்ளது. அந்த பணத்தை வீடு வாங்கியோரிடம் திரும்ப ஒப்படைப்பதே மேம்பாட்டு நிறுவனத்தின் கடமையாகும் என்பதோடு யாரை மேம்பாட்டாளராக நியமிப்பது எனத் தீர்மானிப்பது நில உரிமையாளர்களைப் பொறுத்ததாகும் என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் தங்களின் நியமனத்தை கைவிட்டு நில உரிமையை ரத்து செய்தால் மட்டுமே மாநில அரசு இவ்விவகாரத்தில் தலையிடும் என்று ரோட்சிய மேலும் கூறினார்.

மேம்பாட்டு நிறுவனம் தனது பொறுப்புகளை கைவிடாத வரையில் மாநில அரசினால்  இவ்விவகாரத்தில் தலையிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த மேம்பாட்டாளர்களை மாநில அரசு இதுவரை நேரில் சந்தித்ததில்லை என்றும் மாறாக, கூட்டங்களுக்கு இயக்குநர் வாரிய உறுப்பினர்களை மட்டுமே பிரதிநிதிகளாக அவர்கள் அனுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, வீடுகளுக்கு 15 விழுக்காட்டு  விலை உயர்வை மட்டுமே ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் வீடு வாங்கியோரிடம் பேச்சு நடத்த சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

கோல்டன் ஹோப் பிளாண்டேஷன்ஸ் (கோல்டன் ஹோப்) நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பை ஏரா பெர்மாய் நிறுவனம் ஏற்றது. எனினும், கடந்த 2006 முதல் அந்த வீடமைப்புத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக அந்த பத்து ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதில்  ஆலயத்திற்கு 2 ஏக்கர் நிலம் போக எஞ்சிய இடம் வீடமைப்புக்கு ஒதுக்கப்பட்டது

 

 


Pengarang :