Datuk Seri Anwar Ibrahim (dua, kanan) mempengerusikan mesyuarat bulanan Majlis Presiden PAKATAN di ibu pejabat KEADILAN pada 28 September 2020. Foto Facebook Anwar Ibrahim
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலாக்கா தேர்தலை எதிர்கொள்ள ஹராப்பான் கூட்டணி தயார்

ஷா ஆலம், அக் 19- தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய சூழல் பொருத்தமானதாக இல்லாவிட்டாலும் மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி தயாராக உள்ளது.

இத்தேர்தல் நடத்தப்பட்டால் கோவிட்-19 நோய்த் தொற்றின் நான்காம் அலை உருவாகலாம்  எனத் தாங்கள் அஞ்சுவதாக பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் மன்றம் கூறியது.

கோவிட்-19 பெருந்தொற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில் தற்போதுதான் பொருளாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த சூழலில் தேர்தல் நடத்தப்பட்டால் தேர்தலுக்காக நிர்ணயிக்கப்படும் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் நியாயமற்றதாக அல்லது ஒரு தரப்புக்கு சாதகமாக இருப்பதற்கான ஆபத்து உள்ளது என்று அது தெரிவித்தது.

மலாக்கா மாநிலத் தேர்தலை நடத்துவது தொடர்பில்  தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் எங்களுக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. எனினும் ஹராப்பான் கூட்டணி  தேர்தலை எதிர்கொள்வது  உள்ளிட்ட ஏற்பாடுகளைத் தொடரும் என்று அக்கூட்டணி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு டோஸ் மருந்தளவு தடுப்புசிகளை செலுத்தியவர்கள் மட்டுமே வாக்களிக்க  அனுமதிக்கப்படுவர் என்ற தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ அப்துல் கனி சாலே வெளியிட்ட அறிவிப்பு தங்களுக்கு ஏமாற்றதை அளிப்பதாகவும் அக்கூட்டணி கூறியது.

வாக்காளர் தகுதி தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தின் 11வது பிரிவுக்கு முரணாக இந்த அறிவிப்பு அமைவதற்கான சாத்தியம் உள்ளதையும் அது சுட்டிக்காட்டியது.

இந்த அறிவிப்பு சட்டரீதியாக செல்லுபடியாகாமல் போவதற்கான சாத்தியம் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி அனைத்து மலேசியர்களும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் என கூட்டணித்  தலைவர்கள் கையெழுத்திட்ட அந்த அறிக்கை தெரிவித்தது.

 


Pengarang :