தீபாவளியை முன்னிட்டு 1,000 இந்தியர்களுக்கு ரவாங் சட்டமன்ற உறுப்பினர் உதவி

ஷா ஆலம், அக் 20- அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரவாங் வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 1,000 குடும்பங்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை இலக்காக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 300 பேர் உணவுக் கூடைகளையும் 700 பேர் ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளையும் பெற்றதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

தலா 60 வெள்ளி மதிப்பிலான பாரம்பரிய உணவுகளைத் தயாரிப்பதற்கு தேவையான பொருள்கள் அடங்கிய 300 உணவுப் பொட்டலங்களோடு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன என்றார் அவர்.

கடந்த காலங்களில் தீபாவளியை முன்னிட்டு திறந்த இல்ல உபசரிப்பை நடத்தி வந்தோம். எனினும், நோய்த் தொற்று பரவல் காரணமாக இம்முறை அந்த வழக்கத்தை மாற்றி உணவுப் பொருள்களை விநியோகித்து வருகிறோம் என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உணவுக் கூடைத் திட்டம், வர்த்தக உதவி உள்பட பல்வேறு வழிகளில்  தொகுதியைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உதவிகளை வழங்கியுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

உதவித் தேவைப்படும் தரப்பினரை அடையாளம் காண்பதற்காக கிராமத் தலைவர்கள் உள்ளிட்ட 50 தன்னார்வலர்களை தாங்கள் பணியில் அமர்த்தியுள்ளதாக சுவா கடந்த செப்டம்பர் மாதம் கூறியிருந்தார்


Pengarang :