ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKANSELANGOR

“பெங்கெராக் பெலியா சிலாங்கூர்“ சட்டம் சிலாங்கூர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்

ஷா ஆலம், அக் 25- வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்களில்  “பெங்கெராக் பெலியா சிலாங்கூர்“ சட்டமும் ஒன்றாகும்.

சிலாங்கூரில் வலுவான இளைஞர் அமைப்பை உருவாக்குவது மற்றும் மாநிலத்திலுள்ள இளைஞர் அமைப்புகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பை பேணுவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த இளைஞர் செயலாக்கச் சட்டம் தாக்கல் செய்யப்படுவதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.

இந்த சட்டம் வரும் நவம்பர் மாதம் மாநில சட்டமன்றத்தில் தாக்கல்  செய்யப்படும். இச்சட்ட உருவாக்கத்தின் வழி மாநிலத்திலுள்ள இளைஞர் சங்கங்கள் சட்டப்பூர்வ அமைப்பாக செயல்பட முடியும் என அவர் தெரிவித்தார்.

மாநில மேம்பாட்டிலிருந்து இளைஞர் சமூகம் விடுபடாமலிருப்பதை உறுதி செய்ய இத்திட்டத்திற்கு மந்திரி புசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முழு ஒத்துழைப்பை வழங்குவார் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பெங்கெராக் பெலியா சிலாங்கூர் அமைப்பின்  உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது கைருடின் இவ்வாறு தெரிவித்தார்.

மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்த அமைப்பின் 280 உறுப்பினர்கள் மற்றும 10 நிர்வாக்குழு உறுப்பினர்களுக்கு நியமனம் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாண்டு இரண்டாம் காலாண்டு வரையிலான கணக்கெடுப்பின்படி மாநிலத்திலுள்ள 65 லட்சம் மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதிப் பேர் இளைஞர்களாக உள்ளதாக கைருடின் தெரிவித்தார்.

 


Pengarang :