ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKANSELANGORSELANGOR

இளையோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் மேலும் மூன்று இடங்களில் அமல்

ஷா ஆலம், அக் 25- சிலாங்கூரிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரை உள்ளடக்கிய செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் இம்மாதம் 28 முதல் 31 ஆம் தேதி வரை மேலும் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்படும்.

கம்போங் உலு சூச்சோ சமூக மண்டபத்தில் இம்மாதம் 28 ஆம் தேதியும் அப்பார்ட்மெண்ட் புளோரா டாமன்சாரா, புளோக் ஜி சமூக மண்டபத்தில் அக்டோபர் 30 ஆம் தேதியும் இந்த தடுப்பூசி இயக்கம் நடத்தப்படும்.

இதனிடையே, பண்டாமாரான், விளையாட்டுத் தொகுதியில் இம்மாதம் 31 ஆம் தேதி இந்த தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட பிரசுரம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசித் திட்டம் உள்நாட்டினர் மற்றும் அந்நியப் பிரஜைகளை மையமாக கொண்டு நடத்தப்படுகிறது. முதலாவது டோஸ் தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் மற்றும் செல்வேக்ஸ் திட்டத்தில் இரண்டாவது தடுப்பூசி பெறுவதற்கான தேதியை தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இத்திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் VAX எனும் பட்டனை அழுத்தி சரியான பற்றுச் சீட்டு குறியீட்டை செலுத்துவதன் மூலம் செலங்கா செயலியில் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

நேற்று பண்டமாரான் சமூக மண்டபத்தில் தொடங்கிய இளையோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தின் மூலம் மாநிலத்திலுள்ள குறைந்தது பத்தாயிரம் பதின்ம வயதினர் தடுப்பூசி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூரில் இளையோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்திற்காக 150,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ள வேளையில்  இத்திட்டத்தை மேற்கொள்ள சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 7 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :