வெள்ளத்தை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு பயிற்சி- டீம் சிலாங்கூர் ஏற்பாடு

ஷா ஆலம், நவ 20- வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையை தன்னார்வலர் அமைப்பான டீம் சிலாங்கூர் மேற்கொண்டு வருகிறது.

வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள நான்கு மாவட்டங்களில் கடந்த வாரம் முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக டீம் சிலாங்கூர் செயலகத்தின் தலைவர் ஷியாய்ஸெல் கெமான் கூறினார்.

பேரிடரின் போது வெளியிலிருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால் உடனடியாக தங்களை பாதுகாத்துக் கொள்வதற்குரிய வழிமுறைகள் குறித்து அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

உடனடியாக செயல்படுவதன் மூலம் பொருள் மற்றும் உயிருடற்சேதத்தை தவிர்க்க இயலும். ஆகவே, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து புரிதலை சமூகத்தில் ஏற்படுத்துவது  இத்திட்டத்தின் நோக்கமாகும் என்றார் அவர்.

இத்தகைய பயிற்சிகள் நாளை உலு சிலாங்கூரில் நடத்தப்படவுள்ள வேளையில் உலு லங்காட் மற்றும் கிள்ளானில் பயிற்சி நடத்தப்படும் தேதி  பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசிய பொது தற்காப்புத் துறையின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 டீம் சிலாங்கூர் தன்னார்வலர்கள் பங்கேற்பர் என்று அவர் தெரிவித்தார்.

பந்தாய் ரெமிஸ் பகுதியில் கடந்த மாதம் 3 ஆம் தேதி இத்தகைய திட்டத்தை டீம் சிலாங்கூர் முதன் முறையாக மேற்கொண்டது. பொது மக்கள் ஒன்று கூடும் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 10 இடங்களில் இத்தகைய திட்டங்களை அமல்படுத்த டீம் சிலாங்கூர் திட்டமிட்டுள்ளது.


Pengarang :