ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

அம்பாங் வெள்ளம்- பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளி உதவித் தொகை

ஷா ஆலம், நவ 28- அம்பாங், லெம்பா ஜெயாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 260 குடும்பங்களுக்கு உதவ சிலாங்கூர் மாநில அரசு 260,000 வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

அடிப்படை உதவிகள் உள்பட தலா 1,000  வெள்ளி ரொக்கத்தை சம்பந்தப்பட்ட குடும்பங்கள் எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்திடமிருந்து பெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு அவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் உதவிகளை வழங்க மாநில அரசு தயாராக உள்ளது என்று அவர் சொன்னார்.

முன்னதாக அவர், கம்போங் பிங்கிர் தீகா மற்றும் லெம்பா ஜெயா ஆகிய பகுதிகளுக்கு வருகை புரிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கினார்.

இதனிடையே, தங்கள் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 120,000 வெள்ளியை செலவிடுவதாக எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

அந்த தொகையின் மூலம் மெத்தை, சமையல் எரிவாயு கலன்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் அம்பாங், உலு லங்காட் மற்றும் கோம்பாக்கில் பெய்த அடை மழையினால் கடும் வெள்ளம் ஏற்பட்டது.


Pengarang :