HEALTHNATIONALSELANGOR

கோவிட்-19 அதிகரிப்பின் எதிரொலி: துறைகளுடன் அதிக சந்திப்புகள் நடத்தப்படும்-மந்திரி புசார்

கோம்பாக், டிசம்பர் 4- கோவிட்-19 நோய்த்தொற்றின் சமீபத்திய  நிலவரங்களை கண்காணிப்பதற்காக மாநில அரசு அடுத்த வாரம் முதல் சம்பந்தப்பட்ட துறைகளுடன் அடிக்கடி சிறப்புக் கலந்துரையாடல்களை நடத்தவிருக்கிறது.

 அண்மையில் பள்ளிகளில்  பரவி வரும் நோய்த் தொற்று மற்றும் நாட்டில் அச்சமூட்டும் ஒமிக்ரோன் வகை தொற்றுப் பரவல் கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சொன்னார்.

இப்போது பள்ளிகளில்  தொற்றுப் பரவல் பதிவாகியுள்ளது. மேலும், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தென்னாப்பிரிக்க  மாணவர் ஒருவரிடம் ஓமிக்ரோன்  புதிய வகை தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனவே, அடுத்த வாரம் முதல் இந்த நிலைமையை ஆய்வு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் நாங்கள் சம்பந்தப்பட்ட துறைகளை அடிக்கடி   அழைப்போம் என்று அவர் கூறினார்.

இன்று இங்குள்ள பத்து கேவ்ஸ் டேவான் ராக்யாட் பொது மண்டபத்தில் சிலாங்கூர் குழந்தைகள் பாரம்பரிய நிதித் திட்டத்தின (தாவாஸ்) உறுப்பினர்களுக்கு பள்ளி உதவிப் பொருள்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் தெரிவித்தார்.

முன்னதாக இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், நோய்த் தொற்று இன்னும் நம்மைச் சூழ்ந்துள்ளதால் எஸ்.
ஒ.பி. விதிகளை தொடர்ந்து கடைபிடிக்கும் அதேவேளையில் கட்டொழுங்குடனும் நடந்து கொள்ளும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

Pengarang :