ECONOMYHEADERADHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

21,000 கிஸ் ஐ.டி. திட்ட பங்கேற்பாளர்கள் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டத்தின் வழி பயன்பெறுவர்

கோம்பாக், டிச 5- கிஸ் எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டம் மற்றும் கிஸ் ஐ.டி. எனப்படும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான திட்டத்தில் இவ்வாண்டு பங்கேற்றுள்ள 21,000 பேர் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின்  மூலம் பயன்பெறுவர்.

அண்மையில் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த புதிய திட்டத்தின் வழி சம்பந்தப்பட்ட தரப்பினர் தற்போது பெறும் 200 வெள்ளிக்குப் பதிலாக 300 வெள்ளியைப் பெறுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நோய்த் தொற்று பரவல் காலத்தில் கிஸ் மற்றும் கிஸ் ஐ.டி. பங்கேற்பாளர்களின் சுமையைக் குறைப்பதற்காக அவர்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கும் வகையில் மாதம் 200 வெள்ளியை இவ்வாண்டில் வழங்கி வந்தோம்.

அடுத்தாண்டு தொடக்கம் அத்திட்ட பங்கேற்பாளர்கள் அனைவரையும் பிங்காஸ் திட்டத்தில் சேர்க்கவுள்ளோம். மாதம் 300 வெள்ளி வீதம் 3,600 வெள்ளி அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள பத்து கேவ்ஸ் டேவான் ராக்யாட் பொது மண்டபத்தில் தாவாஸ் திட்ட உறுப்பினர்களுக்கு பள்ளி உதவிப் பொருள்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பிங்காஸ் திட்டத்தின் வழி மாநிலத்திலுள்ள 180,000 பேர்  பயன்பெறும் வகையில் இத்திட்டத்திற்கு 10 கோடியே 80 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுவதாக மந்திரி புசார் 2022 ஆம்  ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அறிவித்தார்.


Pengarang :