ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

சிலாங்கூர் புத்தக விழா 200,000 வருகையாளர்களை ஈர்க்கும்- மந்திரி புசார் நம்பிக்கை

ஷா ஆலம், டிச 5- இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் 11 நாட்களுக்கு நடைபெறும் சிலாங்கூர் புத்தக விழா சுமார் 200,000 வருகையாளர்களை ஈர்க்கும் எனத் தாம் நம்புவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இம்மாதம் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக விழாவுக்கு நேரில் வருவோர் மற்றும் இணையம் வாயிலாக பங்கு கொள்வோரை இந்த எண்ணிக்கை உள்ளடக்கியிருக்கும் என்று அவர் சொன்னார்.

இந்த விழாவுக்கு ஊக்கமூட்டும் வகையில் ஆதரவு கிடைத்துள்ளதை காண முடிகிறது. இங்கு விற்பனையும் அமோகமாக உள்ளது. குறிப்பாக பள்ளி உபகரணங்கள், சமய புத்தகங்கள் மற்றும் இதர பொருள்கள் நன்கு விற்பனையாகின்றன என்றார் அவர்.

இந்த விழா புத்தகப் பிரியர்களுக்கு பயனளிக்கும் அதேவேளையில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட வணிகர்கள் வருமானம் ஈட்டுவதற்கும் துணை புரிகிறது என்று இந்த விழாவைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு விஷேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள வேளையில் கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கூடல் இடைவெளியும் கடைபிடிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இந்த விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 152 விற்பனைக் கூடங்களில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இணையம் வாயிலாக புத்தகம் வாங்குவதற்கான ஏற்பாடும் இங்கு செய்யப்பட்டுள்ளது.


Pengarang :