ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

உதவித் திட்டத்தில் முதியோர் பயன்பெறுவதை உறுதி செய்ய ஜே.பி.என்.- யாவாஸ் தரவு பரிமாற்றம்-கணபதிராவ்

ஷா ஆலம், டிச 7- மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்ட (எஸ்.எம்.யு.இ.) உறுப்பினர்களின் தகவல்கள் மற்றும் தரவுகளை ஒருங்கிணைப்பதில் யாவாஸ் எனப்படும் சிலாங்கூர் பாரம்பரிய மைந்தர் அறவாரியம் தேசிய பதிவுத் துறையுடன் (ஜே.பி.என்.) ஒத்துழைப்பு நல்கி வருகிறது.

அந்த உதவித் திட்டத்தில் பங்கேற்பதிலிருந்து யாரும் விடுபடாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சமூக பொருளாதார மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

எஸ்.எம்.யு.இ. திட்ட பங்கேற்பாளர்களின் தரவுகளை  யாவாஸ் அறவாரியம் தேசிய பதிவு துறையின் ஒத்துழைப்புடன் கடந்த செப்டம்பர் மாதம் சீர் செய்துள்ளது. தேவையின் அடிப்படையில் இந்நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

ஒவ்வொரு திட்டத்திற்குமான பங்கேற்பாளர்களின் தேர்வை புதுப்பிக்கும் பணிகள் அவர்களின் பிறந்த மாதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்ட பங்கேற்பாளர்கள் தங்களின் பிறந்த மாதத்தில்  பற்றுச் சீட்டுகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கு கடைபிடிக்கப்படும் வழி முறைகளை குறித்து கோத்தா டாமன்சாரா உறுப்பினர் ஷாத்ரி மன்சோர் எழுப்பிய கேள்விக்கு கணபதிராவ் இவ்வாறு பதிலளித்தார்.

கடந்த 2019 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் பற்றுச் சீட்டுகளைப் பெறுவதற்கு 319,087 பேர் தகுதி பெற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2019 இல் 35,291 பேரும் 2020 இல் 138,437 பேரும் இவ்வாண்டில் 138,437 பேரும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றனர் என்றார் அவர்.


Pengarang :