ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKANSELANGOR

சிலாங்கூரின் முதலாவது வான் கண்காட்சி 5,000 பார்வையாளர்களை ஈர்த்தது

ஷா ஆலம், டிச 10 – சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சியின் மூன்று நாள் நிகழ்வு மொத்தம் 4,987 பார்வையாளர்களைப் பதிவு செய்துள்ளது. இதன்வழி  5,000 பார்வையாளர்களை ஈர்க்கும் இலக்கு எட்டப்பட்டுள்ளதாக டத்தோ டெங் சாங் கிம் கூறினார்.

நவம்பர் 25 முதல் 27 வரை நடைபெற்ற தொடக்க விமானக் கண்காட்சியில் ஏழு நாடுகளைச் சேர்ந்த 43 கண்காட்சியாளர்கள் பங்கேற்றதாக வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 18 ஆகும், அவற்றில் மிக முக்கியமானவை எம்ப்ரேயர் வணிக ஜெட் விமானம் மற்றும் ஏர்பஸ் ஹெலிகாப்டர் ஆகியவையும அடங்கும் என்று அவர் சொன்னார்.

இது தவிர்த்து, பல்வேறு விண்வெளித் துறையின் ஒத்துழைப்பு தொடர்பான 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த கண்காட்சியில்  கையெழுத்திடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விண்வெளித் தொழிலுக்கான தொழில்சார் பணியாளர்களை உருவாக்கும் கூட்டுத் திட்டம், சிலாங்கூர் ட்ரோன் திறன் மைய உருவாக்கம், சிமுலேட்டர் பயிற்சி மையம், ட்ரோன்களுக்கான ஓரிட பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைக்கும் மையம் உள்ளிட்ட பல்வேறு  துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அம்சங்களை இந்த ஒப்பந்தங்கள் உள்ளடக்கியுள்ளன என்று  2021 வான் கண்காட்சியின் அடைவு நிலை குறித்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

‘சிலாங்கூர், ஆசியான் வணிகம் மற்றும் பொது விமானப் போக்குவரத்து மையம்’ என்ற கருப்பொருளிலான இந்த வான் கண்காட்சியை இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் மூலம் சிலாங்கூர் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கண்காட்சிக்கு மொத்தம் 28 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

சிலாங்கூர் அரசின் இரண்டாவது வான் கண்காட்சி  அடுத்தாண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை சுபாங்கில் நடைபெறும். இந்த கண்காட்சிக்கு மாநில அரசு 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதால் விரிவான ஏற்பாடுகளுடன் மிகச் சிறப்பான முறையில் இந்நிகழ்வு நடத்தப்படும் என்றார் அவர்.

 

 

 


Pengarang :