ECONOMYNATIONALPBT

கிள்ளான், லிட்டில் இந்தியாவில் தைப்பூச விற்பனை களை கட்டுகிறது

கிள்ளான், ஜன 16- இன்னும் சில தினங்களில் தைப்பூச விழா கொண்டாடப்படவுள்ள வேளையில் இவ்விழாவுக்கு தேவையான பொருள்களை வாங்குவதில் மும்முரம் காட்டும் பக்தர்களால் கிள்ளான், ஜாலான் துங்கு கிளானா, லிட்டில் இந்தியா பகுதி மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளது.

சிலாங்கூர் கினி மேற்கொண்ட ஆய்வில் பக்தர்கள் மஞ்சள், குடம், பால், மஞ்சள் உடை உள்ளிட்ட பொருள்களை வாங்குவதை காண முடிந்தது.

இங்கு மூலிகை மற்றும் பலசரக்கு பொருள்களை வியாபார செய்து வரும் ரவி முத்து பிள்ளை (வயது 62) கூறுகையில், பல சிறு வியாபாரிகள் வியாபாரத்திற்காக மூலிகை பொருள்களை வாங்க தமது கடைக்கு வருவதாகச் சொன்னார்.

இவ்வாண்டு வியாபாரம் ஓரளவு சிறப்பாக உள்ளது. எனினும் கோவிட்.19 பெருந்தொற்றுக்கு முன்பு இருந்தது போல் அவ்வளவு சிறப்பாக இல்லை. நாம் இன்னும் எஸ்.ஒ.பி. நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனால் வியாபாரம் சற்று மந்தமாக உள்ளது என்று முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ரவி கூறினார்.

தனது இமிடேஷன் நகைக்கடையில் இம்மாதம் தொடக்கம் முதல் விலைக் கழிவில் பொருள்களை விற்பனை செய்து வருவதாக வளையல், சங்கிலி, காதணி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வரும் கவிதா முருகேசன் (வயது 50) தெரிவித்தார்.

தைப்பூசம் மற்றும் திருமண வைபங்களை முன்னிட்டு 10 முதல் 20 விழுக்காடு வரையிலான விலைக்கழிவை வரும் ஏப்ரல் மாதம் வரை வழங்குகிறோம். வாடிக்கையாளர் குறைந்த பட்சம் 5 வெள்ளி விலையில் பொருள்களை வாங்கலாம் என்றார் அவர்.

வாடிக்கையாளர்கள் ஓய்வின்றி கடைக்கு வந்தவண்ணமிருந்தாலும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளுக்கு நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கிறோம். ஒரு நேரத்தில் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குகிறோம் என்று அவர் தெரிவித்தார்


Pengarang :