ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

பேரிடரை எதிர்கொள்ள சிறந்த எச்சரிக்கை முறை அவசியம்- டத்தோ தெங்

ஷா ஆலம், ஜன 22- பேரிடர் தொடர்பான சிறந்த முன்னெச்சரிக்கை முறையையும் பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கு  கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தை நாம் அனைவரும் ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வெள்ளப் பேரிடர் நமது கணிப்புக்கு அப்பாற்பட்டது என்பதோடு சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் சக்திக்கும் மீறியது என்பதால் இச்சம்பவம் குறித்து  ஒருவரை ஒருவர் குறை கூறுவது தேவையற்ற ஒன்று என பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

மாறாக, வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் மக்கள் விரைந்து செயல்பட உதவும் எச்சரிக்கை முறை இல்லாதது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தொலைபேசி வழி தகவல்களைப் பரப்பும் முறை நம்மிடம் இல்லை. இதனால் பிரச்சனைகள் ஏற்படும் பொது மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வெளியேற மறுக்கின்றனர் என்று அவர் சிலாங்கூகினிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

தொடர் மழை தொடர்பான எச்சரிக்கையை சிலாங்கூரில் வெள்ள மேலாண்மையில் சம்பந்தப்பட்ட சில தரப்பினர் பொருட்படுத்தாத காரணத்தால் இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட நேர்ந்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிய யாக்கோப், நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் குற்றஞ்சாட்டியிருந்தது தொடர்பில் தெங் இவ்வாறு கருத்துரைத்தார்.


Pengarang :