ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜோகூர் தேர்தல்- பிரசார காலத்தை நீட்டித்து வாக்காளர்களைச் சந்திக்க அனுமதிப்பீர்- பக்கத்தான் கோரிக்கை

ஷா ஆலம், ஜன 25- ஜோகூர் மாநிலத் தேர்தலின் போது பிரசாரக் கூட்டங்களை நடத்துவதற்கும் வாக்காளர்களைச் சந்திப்பதற்கும் அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்தை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

நாடு எண்டமிக் கட்டத்தை நோக்கி நகர்வது, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது மற்றும் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 80 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துள்ளது ஆகிய அடிப்படையில்  இந்த கோரிக்கையை தாங்கள் முன்வைப்பதாக ஹராப்பான் தலைவர் மன்றம் கூறியது.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களும் வாக்காளர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வுகளும்  பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையம் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (எஸ்.ஒ.பி.) சரி செய்ய வேண்டும் என்று அந்த மன்றம் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியது.

பக்கத்தான் ஹராப்பான் முன்வைத்துள்ள கோரிக்கைகள் வருமாறு-

  1. கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளுடன் வீடு வீடாகச் சென்று பிரசுரங்களை விநியோகிக்க அனுமதிக்க வேண்டும்
  2. அச்சு மற்றும் ஒளி,ஒலிபரப்பு ஊடகங்களில் அனைத்து கட்சிகளுக்கு சமமான அளவில் பிரசார வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்
  3. தபால் வாக்களிப்பை அமல் செய்வதற்கு ஏதுவாக வெளிநாடுகளில் உள்ள மலேசிய தூதரகங்களுடன் தேர்தல் ஆணையம் இணைந்து செயல்பட வேண்டும்.
  4. தேர்தல் பிரசாரத்திற்கு குறைந்தது 21 நாட்கள் வழங்கப்பட வேண்டும்.

Pengarang :