ECONOMYMEDIA STATEMENTPBT

செர்டாங்கில் மண்சரிவு- ஆற்றின் கரையை வலுப்படுத்தும் பணிகள் தீவிரம்

ஷா ஆலம், ஜன 26- செர்டாங், லெஸ்தாரி பெர்டானா, ஜாலான் எல்.பி. 1ஏ/2 இல் நேற்று ஆற்றோரம் ஏற்பட்ட மண் சரிவைத் தொடர்ந்து கரைகளைப் வலுப்படுத்தும் பணியை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அப்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவுக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதோடு இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக சீரமைப்பு பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக பிரிவின் துணை இயக்குநர் அஸ்பரிஸால் அப்துல் ரஷிட் கூறினார்.

ஒன்பது மீட்டர் உயரமும் 90 மீட்டர் நீளமும் கொண்ட ஆற்றின் கரைப் பகுதி திடீரென உள்வாங்கியது. இதனால் சாலையின் ஒரு பகுதியும் கார் நிறுத்துமிடமும் முற்றாக சரிந்தன. இச்சம்பவத்தில் ஐந்து கார்கள் சேதமுற்றன. எனினும், உயிருடற் சேதம் ஏற்படவில்லை என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள 17 வர்த்தக மையங்கள் தங்கள் நடவடிக்கையை நிறுத்திக் கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளதோடு பாதுகாப்பானது என உறுதி செய்யப்படும் வரை அப்பகுதியில் யாரும் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

நேற்று மாலை நிகழ்ந்த இந்த மண் சரிவு சம்பவத்தில் ஆற்றின் கரையோரம் உள்ள கார் நிறுத்துமிடத்தில் இருந்த ஐந்து கார்கள் ஐந்து முதல் ஏழு மீட்டர் பள்ளத்தில் விழுந்தன. இதே போன்ற மண் சரிவு சம்பவம் கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த து என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :