ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வெ. 150,000 மதிப்புள்ள பதிவு பெறாத மருந்துகள், அழகு சாதனைப் பொருள்கள் பறிமுதல்

கோலாலம்பூர், மார்ச் 10- மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஓப்ஸ் மேஜெஸ்டிக் நடவடிக்கையில்  152,213 வெள்ளி மதிப்புள்ள  பதிவு செய்யப்படாத 531 வகையான மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இங்குள்ள ஜாலான் டான் சியு சின் பகுதியில் உள்ள ஒரு சட்டவிரோத மருந்தகம் உள்பட ஏழு மையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இந்த பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா சுகாதார இயக்குநர் டாக்டர் நோர் ஆயிஷா அபு பாக்கார் கூறினார்.

இந்த விற்பனை மையங்கள் அந்நிய நாட்டினர் மத்தியில் பிரசித்தி பெற்று விளங்கி வந்ததாக நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

1952 ஆம் ஆண்டு விஷ மருந்து சட்ட விதிகளின்படி விஷத்தன்மை கொண்டவை என பட்டியலிப்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, வலி நிவாரணி உள்ளிட்ட மருந்துகள் இச்சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டதாக அவர் சொன்னார்.

சில மருந்துப் பொருள்கள் பகிரங்கமாக விற்கப்பட்ட வேளையில் மேலும் சில மருந்துகள் இதர பொருள்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தத்தாக  அவர் குறிப்பிட்டார்.

தீவிர  கண்காணிப்பு நடவடிக்கை மற்றும் பொது மக்களின் புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா மருந்தக அமலாக்கப் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சின் மருந்தக அமலாக்க பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த 45 அதிகாரிகள் இச்சோதனை நடவடிக்கையில் பங்கு கொண்டனர் என்றார் அவர்.

இதன் தொடர்பில் 1952 ஆம் ஆண்டு மருந்து விற்பனைச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதல் முறையாக புரியும் குற்றத்திற்கு 50,000 வெள்ளி அபராதமும் தொடர்ந்து புரியும் குற்றங்களுக்கு 100,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்


Pengarang :