ECONOMYEVENTNATIONAL

துபாய் கண்காட்சியில் வெ.96 கோடி வெள்ளி முதலீடு பதிவு- டத்தோ தெங் தகவல்

ஷா ஆலம், மார்ச் 18– இம்மாதம் 6 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்ற “மிங்கு சிலாங்கூர்@துபாய் எக்ஸ்போ 2020“ நிகழ்வின் வழி 96 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகள் பதிவு செய்யப்பட்டன.

மத்திய அரசு நிர்ணயித்த 50 கோடி வெள்ளி இலக்கைக் காட்டிலும் இது அதிகமாகும் என்று முதலீடு, வாணிகம் மற்றும் தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாம் கிம் கூறினார்.

“மிங்கு சிலாங்கூர்@துபாய் எக்ஸ்போ 2020“ கண்காட்சியின் வாயிலாக அனைத்துலக முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களின் கவனத்தை ஈர்க்க முடிந்ததோடு அக்கண்காட்சியில் கலந்து கொண்ட வர்த்தகப் பேராளர்கள் சிலாங்கூர் மாநிலத்தில் முதலீடு செய்வதில் தங்களுக்கு உள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர் என்று அவர் சொன்னார்.

அந்தச் சிலாங்கூர் வார நிகழ்வில் 158 இணை வாணிகங்கள், 92 வாணிக ஒத்துழைப்பு வாய்ப்புகள் கண்டறியப்பட்டன. இந்த முதலீட்டு வாய்ப்புகளின் மொத்த மதிப்பு 96 கோடி வெள்ளியாகும் என்றார் அவர்.

இந்த நிகழ்வின் போது நோர்த்போர்ட் (மலேசியா)பெர்ஹாட் நிறுவனத்திற்கும் சீஹாக் லைன்ஸ் ஷிப்பி எல்.எல்.சி. நிறுவனத்திற்கும் இடையே 4.5 கோடி வெள்ளி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாநிலச் சட்டமன்றத்தில் இன்று புக்கிட் லஞ்சான் உறுப்பினர்  எலிசெபத் வோங் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“மிங்கு சிலாங்கூர்@டுபாய் எக்ஸ்போ 2020“ கண்காட்சியின் வழி மாநிலம் பெற்ற முதலீட்டின் மதிப்பு குறித்து எலிசெபத் கேள்வியெழுப்பியிருந்தார்.


Pengarang :