ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூரில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்கள் அமலாக்கம்

ஷா ஆலம், மார்ச் 21- கார்பன் வெளியேற்றத்தைத் தடுப்பது உள்ளிட்ட பருவநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு விவகாரங்களைக் கையாள பசுமைத் தொழில்நுட்ப நடவடிக்கைத் திட்டத்தை சிலாங்கூர் அரசு அமல்படுத்தியுள்ளது.

பொது மக்கள் ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும் அந்த நடவடிக்கைத் திட்டங்களில் ஒன்றாகும் என்று பருவநிலை மாற்றத்திற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

ஊராட்சி மன்ற நிலையிலான அனைத்து திட்டமிடல் கொள்கைகளிலும் கார்பன் குறைந்த நகர கட்டமைப்பு பயன்படுத்தி பசுமை நகர உருவாக்கத்தை மாநில அரசு அமல்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, நீண்ட கால அடிப்படையில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு ஊராட்சி மன்றங்கள், அரசு துறைகள் மற்றும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் திட்டங்களையும் நாங்கள் ஆதரிக்கிறோம். 10 கோடி மரங்களை நடும் இயக்கம் மற்றும் “ஏர்த் ஹவர்“ என்னும் சர்வதேச இயக்கத்தின் திட்டங்களையும் செயல்படுத்துவதும் அவற்றில் அடங்கும் என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் இன்று பண்டார் உத்தாமா உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பருவ நிலை மாற்றம் தொடர்பில் மாநில அரசு கொண்டுள்ள கொள்கைகள், ஆய்வுகள் அல்லது திட்டங்கள் குறித்து ஜமாலியா கேள்வியெழுப்பியிருந்தார்.

மின்சாரத்தை சேமிக்கும் முயற்சியாக சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்பது மாவட்ட மற்றும் நில அலுவலகங்களில் சோலார் எனப்படும் சூரிய ஒளி ஈர்ப்புத் தகடுகளை மாநில அரசு பொருத்தியுள்ளதாகவும் ஹீ லோய் சியான் தெரிவித்தார்.

 


Pengarang :