ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பொருளாதார மீட்சி கண்டு வரும் மலேசியாவுக்கு உலகின் நிச்சயமற்ற சூழல் மீது எச்சரிக்கை தேவை

கோலாலம்பூர், மார்ச் 31- மலேசியா பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. எனினும், உலகின் நிச்சயமற்ற சூழல் காரணமாக அது மிகுந்த எச்சரிக்கை போக்கை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மலேசியா இவ்வாண்டு ஜனவரி மாதம் தேசிய மீட்சித் திட்டத்தின்  இறுதிக் கட்டத்தில் நுழைந்துள்ள நிலையில் சமூக பொருளாதார நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதாக மலேசிய புள்ளிவிபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ முகமது உஸீர் மாஹிடின் கூறினார்.

இருந்த போதிலும், பருவநிலை சம்பந்தப்பட்ட பேரழிவுகள், உலகளாவிய அரசியல் பதற்றம், விநியோகச் சங்கிலி தொடரில் ஏற்படும் இடையூறுகள் போன்றவை நாட்டின் பணவீக்கத்திற்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் மீட்சி நிலையை நோக்கி பயணிக்கிறது. நாட்டின் முன்னணி குறியீடு தொடர்ச்சியாக 100.0 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து இவ்வாண்டு ஜனவரியில் 110.0 புள்ளியைப் பதிவு செய்துள்ளது என்றார் அவர்.

அனைத்துலக எல்லைகளைத் திறப்பதற்கு நாடு தயாராகி வருகிறது. இதன் மூலம் சுற்றுலாத் தொடர்பான துறைகளுக்கு நேர்மறையான விளைவுகளும் சில துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண்பதற்குரிய வாய்ப்பும் ஏற்படும்.

பொருளாதார மீட்சி குறித்து நாடு நம்பிக்கையுடன் இருக்கும் அதே வேளையில் புவிசார் அரசியல் நிலைத்தன்மையற்ற போக்கு மற்றும் சீனாவின் பல நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் போன்ற நிச்சயமற்ற சூழல் காரணமாக அது கவனப்போக்கையும் கடைபிடிப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.


Pengarang :