ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஜனவரி முதல் நாட்டில் 29,000 சிறார்கள் கை,கால்,வாய்ப்பு புண் நோயினால் பாதிப்பு

ரெம்பாவ், மே 15- நாட்டில் கை,கால், வாய்ப்புண் நோய் அபரிமித உயர்வு கண்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 28,957 பேர் அந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை தரவுகள் காட்டுகின்றன.

கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் 4,239 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்ததாக சுகாதார அமைச்சர்  கைரி ஜமாலுடின் கூறினார்.

பொருளாதாரத் துறைகள் குறிப்பாக, பள்ளிகள் சிறார் பராமரிப்பு மையங்கள், பாலர் பள்ளிகள் போன்றவை முழு அளவில் செயல்படத் தொடங்கியன் விளைவாக இந்நோய்த் தொற்று எண்ணிக்கை உயர்வதற்கான சாத்தியம் உள்ளதை அமைச்சு முன்கூட்டியே கணித்திருந்ததாக அவர் சொன்னார்.

இந்நோய் மிகவும் அபரிமித உயர்வை கண்டுள்ளது. இது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனென்றால் கடந்த ஈராண்டுகளாக பொது முடக்கம் அமல்படுத்தப்படிருந்த காரணத்தால் பொது மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் இருந்தது. எனினும், இப்போது அனைத்து பொருளாதாரத் துறைகளும் திறக்கப்பட்டு விட்டதால் கை,கால், வாய்ப்புண் நோயின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது என்றார் அவர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் கோவிட்-19 தவிர்த்து இதர நோய்கள் பற்றி கவலைப்படாமல் இருந்து வந்தோம். கோவிட்-19 நோய்ப் பரவலை நாம் வெற்றிகரமாக கையாண்ட போதிலும் மற்ற நோய்களின் தாக்கம் இன்னும் உள்ளதை நாம் மறந்து விடக்கூடாது. ஆகவே நாம் அனைவரும் சுய சுகாதார பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பொது மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தொற்று நோய்ப் பரவல் உள்ளதா என்பதை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக மைசெஜாத்ரா செயலியில் உள்ள அம்சங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :