ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTPBT

உலு சிலாங்கூர் திடீர் வெள்ளத்தில் சிக்கிய மூவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

ஷா ஆலம், மே 16 – மாநிலத்தின் பல மாவட்டங்களில் இன்று மதியம் முதல் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

பெர்னாமா அறிக்கையின்படி, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) பணியாளர்கள் கம்பொங் ஜாவாவில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய ஒரு குழந்தை உட்பட மூன்று நபர்களை மீட்டுள்ளனர்.

உலு சிலாங்கூரில் பாதிக்கப்பட்ட பகுதிகள் என கெர்லிங், கம்பம் கிளாப்பா மற்றும் கோலா குபு பாருவில் உள்ள ராயல் மலேசியா போலீஸ் கல்லூரி (பிடிஆர்எம்) சந்திப்புக்கு முன்னால் உள்ள பகுதிகள் என்று சினார் ஹரியான் தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, சமூக ஊடகப் பயனர்கள் தாமன் செரெண்டா மக்மோர் குடியிருப்புப் பகுதி உட்பட பாதிக்கப் பட்ட பிற இடங்களைப் பற்றிய தகவலையும் பகிர்ந்து கொண்டனர்.

இதற்கிடையில், உலு சிலாங்கூர் தகவல் துறை கூறியதாவது: வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்து வருவதால், கோலா குபு பாரு, கம்போங் பெர்த்தாக் மற்றும் பத்தாங் கலி ஆற்றின் நீர்மட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது.

“உலு சிலாங்கூர் மாவட்ட பேரிடர் உதவி குழு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக நிவாரண மையத்தை (பிபிஎஸ்) தீவிரமாக ஒருங்கிணைத்து வருகின்றது.

பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் குழந்தைகளைக் கவனமுடன் பாதுகாக்க கேட்டுக் கொண்டனர். இந்த நேரத்தில் எந்தவொரு அசம்பாவிதங்களை தவிர்க்க குழந்தைகளை வெள்ள நீரிலோ அல்லது அருகிலுள்ள வடிகால்களிலோ விளையாட விடாதீர்கள்” என்று முகநூலில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தந்த இடங்களில் வெள்ள நிலைமைகள் குறித்த சமீபத்திய தகவல்களைப் பகிருமாறும், அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறும் ஏஜென்சி பொதுமக்களை வலியுறுத்தியது.


Pengarang :