ECONOMYSELANGOR

60 கார் நிறுத்துமிடக் குற்றங்கள் புரிந்த ஆடவருக்கு நீதிமன்றம் 150 வெள்ளி அபராதம்

ஷா ஆலம், மே 27– கார் நிறுத்துமிடக் குற்றங்களுக்கான அபராதத் தொகையைச் செலுத்த த் தவறியதற்காக ஆடவர் ஒருவர் கோல லங்காட், தெலுக் டத்தோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

பொது வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் செலுத்தாமல் வாகனம் நிறுத்திய குற்றத்தை 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் ஒப்புக் கொண்டதாக கோல லங்காட் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அமிருள் அஜிசான் அப்துல் ரஹிம் கூறினார்.

இக்குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட ஆடவருக்கு மாஜிஸ்திரேட் கைருள் ஃபார்ஹி யூசுப் 150 வெள்ளி அபராதமும் அபராதத்தை செலுத்தத் தவறினால் மூன்று நாள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்ததாக அவர் தெரிவித்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 60 கார் நிறுத்துமிடக் குற்றங்களுக்கான அபராதத் தொகையைச் செலுத்த தவறியதற்காக அந்நபர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் என அமிருள் சொன்னார்.

அந்நபர் மீது 2007 ஆம் ஆண்டு கோல லங்காட் நகராண்மைக் கழக சாலை போக்குவரத்து விதியின் 8 ஆம் பத்தியின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனிடையே, கோல லங்காட் ஊராட்சி மன்றம் நகராண்மைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டு ஓராண்டு நிறைவடைவதையொட்டி வழங்கப்படும் கார் நிறுத்துமிட குற்றப்பதிவுகளுக்கான அபராதச் சலுகை வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக அமிருள் குறிப்பிட்டார்.


Pengarang :