ECONOMYNATIONAL

உணவுப் பொருள் விலை மற்றும் விநியோகத்தை கையாள ஆக்ககரமான செயல் முறை தேவை- நிபுணர்கள் கருத்து

கோலாலம்பூர், மே 31- சுமார் 60 விழுக்காடு வரை உயர்வு கண்டுள்ள உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை, குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு மட்டுமின்றி பெரிய நகரங்களில் வசித்து வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்கு அதிகம் செலவிட வேண்டிய நிருபந்தம் காரணமாக குடும்பச் செலவினம் அதிகரித்து சேமிப்பின் அளவை குறைக்க வேண்டிய  நிருபந்தம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதத்திற்கான பயனீட்டாளர் விலைக் குறியீடு (சி.பி.ஐ.) அல்லது பண வீக்க அளவைக் கொண்டு பார்க்கையில் வரும் மாதங்களில் பயனீட்டாளர்கள் மத்தியில் வாங்கும் சக்தி பெரிதும் குறையும் என கணிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு பொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் சந்தையில் சில பொருள்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்குவதற்கும் அரசாங்கம் ஆக்ககரமான வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திற்கான பயனீட்டாளர் விலைக் குறியீடு 2.3 விழுக்காடு அதிகரித்து 125.9 விழுக்காடாக உயர்வு கண்டுள்ளதை மலேசிய புள்ளி விபரத்துறையின் தரவுகள் காட்டுகின்றன. கடந்தாண்டு இதே காலக் கட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 123.1 விழுக்காடு அதிகமாகும்.

கடந்த ஏப்ரல் மாதம் உணவுப் பண வீக்கம் 4.1 விழுக்காடு அதிகரித்து உணவு மற்றும் பான வகைகளின் விலை 89.1 விழுக்காடு உயர்வு கண்டதாக புள்ளி விபரத்துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மாஹிடின் கூறினார்.


Pengarang :