ECONOMYHEALTHSELANGOR

சிகிஞ்சான் “சிலாங்கூர் சாரிங்“ நிகழ்வில் நோய்கள் தொடர்பான விளக்கமளிப்பு நிகழ்வு நடைபெறும்

ஷா ஆலம், மே 31- சிகிஞ்சான் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனை நிகழ்வில் நோய்த் தடுப்பு தொடர்பான விளக்கமளிப்பு நிகழ்வு இடம் பெறும்.

மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக மருத்துவமனை, வேந்தர் துவாங்கு முகரிஸ் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் இந்த விளக்கமளிப்பை வழங்குவர் என்று சிலாங்கூர் பொது சுகாதார ஆலோசக குழுவின் உறுப்பினர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லின கூறினார்.

சிகிஞ்சானில் இந்த மருத்துவ பரிசோதனைத் திட்டம் பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் அதிகமானோர் பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் மருத்துவ  நிபுணர்கள் தங்கள் சார்ந்துள்ள துறைகள் குறித்த மருத்துவ விளக்கத்தை வழங்குவர் என்றார் அவர்.

பொது மக்கள் தங்கள் உடலாரோக்கியம் குறித்த விழிப்புணர்வைப் பெறுவதற்கு ஏதுவாக இது போன்ற விளக்கமளிப்பு நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாநில அரசின் ஏற்பாட்டிலான சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டம் வரும் ஞாயிற்றுக் கிழமை யோக் குவான் சீனப்பள்ளியில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது.

சுமார் 34 லட்சம் வெள்ளி செலவில் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் இந்த இலவச பரிசோதனைத் திட்டத்தின் வாயிலாக 39,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிசோனைத் திட்டம் இம்மாதம் 22 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் மாதம் 4 ஆம் தேதி முடிவடைகிறது.


Pengarang :