ECONOMYHEALTHSELANGOR

தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் இருந்தால் சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பரிசோதனை செய்வீர்

ஷா ஆலம், மே 31– அடிக்கடி தலைவலி, வயிற்று வலி, நெஞ்சு வலி, சிறுநீர் கழிப்பதில் பிரச்னை போன்ற உபாதைகளை எதிர்நோக்குவோர் சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் வழி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சிலாங்கூர் அரசு வழங்கும் இந்த இலவச மருத்துவப் பரிசோதனையின் வழி பொது மக்கள் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்று  பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இந்த மருத்துவப் பரிசோதனைத் திட்டம் ஒவ்வொரு தொகுதியிலும் மேற்கொள்ளப்படுகிறது. இச்சோதனைகளை வெளியில் மேற்கொண்டால் அதிக செலவு பிடிக்கும். மேலும் மருத்துவமனைகள் அமைந்துள்ள தொலைவையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே, செலங்கா  செயலி வாயிலாக இந்த சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் விரைந்து பதிவு செய்து கொள்ளுங்கள் என்று அவர் சொன்னார்.

இதற்கான பதிவு இலவசமானது. செலங்கா செயலியில் உள்ள பாரத்தில் வழங்கப்படும் இடர் மதிப்பீடு தொடர்பான விபரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு எந்த மாதிரியான சோதனையை மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

சுமார் 34 லட்சம் வெள்ளி செலவில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த இலவச பரிசோதனைத் திட்டத்தின் வழி மாநிலத்திலுள்ள சுமார் 39,000 பேர் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலவச பரிசோதனை இம்மாதம் 22 ஆம் தேதி முதல் வரும் ஜூன் மாதம் 4 ஆம் தேதி வரை நடைபெறும்.


Pengarang :