ECONOMYNATIONAL

259வது ஆட்சியாளர் மாநாட்டிற்கு பெர்லிஸ் ராஜா தலைமை தாங்கினார்

கோலாலம்பூர், ஜூன் 29- இங்குள்ள இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற 259வது ஆட்சியாளர் மாநாட்டிற்கு மேன்மை தங்கிய பெர்லிஸ் ராஜா துவாங்கு சைட் சிராஜூடின் புத்ரா ஜமாலுல்லாயில் தலைமை தாங்கினார்.

காலை 11.00 மணிக்கு கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் அரண்மனையின் பிரதான சதுக்கத்தில் அரச மலாய் இராணுவத்தில் முதல் பட்டாளத்தின் மரியாதை அணிவகுப்பை துவாங்கு சிராஜூடின் ஏற்றுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்திற்கு தலைமையேற்பதை குறிக்கும் விதமாக துவாங்கு அவர்கள் அரண்மனை வளாகத்தில் கெரியாங் வகை மரத்தை நட்டார்.

மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவும் இந்த மரம் நடும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த மரம் நடும் நிகழ்வு மாட்சிமை தங்கிய பேரரசரின் சிந்தனையில் உருவான ஒரு திட்டமாகும். பதினாறவது பேரரசராக அவர் பதவியேற்பதற்கு முன்னர் இத்தகைய நிகழ்வு அரண்மனை வளாகத்தில் நடைபெற்றதில்லை.

இந்த இரண்டு நாள் மாநாட்டில் கிளந்தான், பகாங் மற்றும் ஜோகூர் ஆட்சியாளர்கள் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர்.

இதற்கு முந்தைய மாநாடு கடந்த மார்ச் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் திரங்கானு சுல்தான் மிஸான் ஜைனால் அபிடின் தலைமையில் நடைபெற்றது.


Pengarang :