ECONOMYMEDIA STATEMENT

வெ. 15.6 லட்சம் மதிப்புள்ள கடத்தல் மதுபானங்களை சபா சுங்கத்துறை கைப்பற்றியது

கோத்தா கினபாலு, ஆக 5– கடத்தல் மதுபானங்கள் அடங்கிய மூன்று கொள்கலன்களை அரச மலேசிய சுங்கத்துறையின் சபா மாநிலப் பிரிவு கடந்த மாதம் 29 ஆம் தேதி கைப்பற்றியது.

வரி உள்பட 15 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான இந்த மதுபானங்களை இதர வணிகப் பொருள்களின் பெயரில் கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

பல்வேறு வகையான மதுபானங்கள் அடங்கிய 9,000 பெட்டிகள் இந்த நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டன. 658,000 வெள்ளி மதிப்புள்ள இந்த மதுபானங்களுக்கு செலுத்த வேண்டிய வரி 910,000 வெள்ளியாகும்.

வெளிநாடு ஒன்றிலிருந்து செபங்கோர் துறைமுகத்திற்கு வந்த அந்த கொள்கலன்கள் ஸ்கேன் செய்யப்பட்டதில் அவற்றில் மதுபானங்கள் அடங்கிய பெட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத் துறையின் சபா மண்டலத்திற்கான தலைமை இயக்குநர் ஜூலைமான் சோய்மின் கூறினார்.

அதிகாரிகள் பார்வையிலிருந்து தப்புவதற்காக இதர வணிகப் பொருட்கள் என்ற பெயரில் அவை பதிவு செய்யப்பட்டிருந்தது என அவர் சொன்னார்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என கூறிய அவர், இதன் தொடர்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இத்தகைய கடத்தல் சம்பவம் தொடர்பில் தகவல் அளித்து உதவுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :