ALAM SEKITAR & CUACAECONOMY

பாலிங் வெள்ளத்தினால் வெ.2.8 கோடி இழப்பு- கெடா மந்திரி புசார் தகவல்

அலோர்ஸ்டார், செப் 14- கடந்த ஜூலை மாதம் பாலிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கெடா மாநிலத்திற்கு ஏற்பட்ட இழப்பு 2 கோடியே 80 லட்சம் வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளதாக மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் கூறினார்.

வீடுகள், வளாகங்கள், அடிப்படை வசதிகள், வாகனங்கள் மற்றும் இதர சொத்துகளுக்கு ஏற்பட்ட இழப்புகளும் இதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

கடந்த ஜூலை மாதம் 4 ஆம் தேதி ஏற்பட்ட முதலாவது வெள்ளம் தொடர்பில் பாலிங் மாவட்ட மன்றத்தினால் அமைக்கப்பட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம் இந்த மதிப்பீட்டைச் செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேத மதிப்பை கணக்கிடும் பணியில் 80 கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வெள்ளம் தொடர்பில் செய்யப்பட்ட 900 போலீஸ் புகார்களின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஜூலை 28 ஆம் தேதி ஏற்பட்ட இரண்டாவது வெள்ளத்தில் பொது மக்களுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை என அவர் சொன்னார்.

கடந்த ஜூலை  4 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் 23 வயது கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழந்ததோடு 41 இடங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.


Pengarang :