ANTARABANGSAECONOMYNATIONALPENDIDIKAN

எகிப்தில் கைதான மலேசிய மாணவர் விடுவிக்கப்பட்டார்

புத்ராஜெயா, செப் 26- எகிப்திய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அல்-அசார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மலேசிய மாணவர் செப்டம்பர் 24ஆம் தேதி மாலை விடுவிக்கப்பட்டார்.

அந்த மாணவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்வார் என்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா நேற்றிரவு  வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

மாணவர்களின் நலன் காக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கெய்ரோவில் உள்ள மலேசியத் தூதரகம் மற்றும் கோலாலம்பூரில் உள்ள எகிப்து அரபுக் குடியரசின் தூதரகம் மூலம் வெளியுறவுத் துறை அமைச்சு அந்நாட்டு வெளியுறவு அமைச்சுடன் அணுக்கமாகச் செயல்படுகிறது என்று அவர் கூறினார்.

இந்த விஷயத்தில் வழங்கிய ஒத்துழைப்பிற்காக எகிப்து அரபுக் குடியரசின் அரசாங்கத்திற்கு மலேசிய அரசு மனமார்ந்த நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் அமைச்சு எப்போதும் அக்கறை கொண்டுள்ளது என்று சைபுடின் கூறினார்.

மலேசியர்கள் எப்போதும் தாங்கள் இருக்கும் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


Pengarang :