ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

இந்தோ. கால்பந்து வன்செயல்- அறுவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு

ஜாகர்த்தா, அக் 7- கடந்த வாரம் நிகழ்ந்த கால்பந்தாட்ட வன்செயல் மற்றும் ரசிகர்கள் மிதியுண்டு மாண்டச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் உள்பட அறுவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்தோனேசிய போலீஸ் தலைவர் கூறினார்.

கிழக்கு ஜாவாவின் மாலாங் பிரதேசத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் 131 பேர் மிதிண்டு மாண்டனர். உலகின் மோசமான கால்பந்தாட்ட பேரிடராக இச்சம்பவம் கருதப்படுகிறது.

கலவரம் மற்றும் போலீசாரின் கண்ணீர்ப் புகை குண்டு தாக்குதலிலிருந்து தப்பிக்க ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு அரங்கை விட்டு வெளியேற முயன்றனர். எனினும், அரங்கின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் அவர்களால் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் போட்டி ஏற்பாட்டாளர்களும் போலீஸ்காரர்களும் விசாரணை வளையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறிய நாட்டின் போலீஸ் தலைவர் லிஸ்டேயோ சிகிட் பிராபோவோ, மேலும் அதிகமானோர் மீது குற்றஞ்சாட்டப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்றார்.

அவர்கள் மீது மரணம் ஏற்படும் அளவுக்கு அலட்சியமாக இருந்தது தொடர்பில் கிரிமினல் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும். குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் ஐந்தாண்டு வரையிலான சிறைத்தண்டனை அவர்களுக்கு விதிக்கப்படும்.

கண்ணீர்ப் புகை குண்டுகளைப் பயன்படுத்தியது தொடர்பில் மூன்று போலீஸ் அதிகாரிகள் மீதும் போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர், அரேமா எப்.சி. கால்பந்து குழுவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஆகியோரே குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அதிகாரிகளாவர்.


Pengarang :