ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

இஸ்மாயில் சப்ரி  அமைச்சரவை பராமரிப்பு அரசாங்கமாக தொடர்ந்து செயல்படும்

புத்ராஜெயா, அக் 11- பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அமைச்சரவை தொடர்ந்து பராமரிப்பு அரசாக செயல்படும் என்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அமைச்சரவைக் கூட்டங்கள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் அரசின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஸூக்கி அலி தெரிவித்துள்ளார். 

 நாட்டின் நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு அமைச்சரவை இன்னும் ஆலோசனை வழங்க முடியும் என்றும் எனினும், அமைச்சரவை கொள்கை விஷயங்களில் முடிவு செய்ய முடியாது என்றும் அவர் சொன்னார்.

பராமரிப்பு அரசாங்கத்தில் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் வழக்கம்  போல் செயல்படுவார்கள். ஆயினும், புதிய கொள்கை விஷயங்களில் அவர்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அமைச்சரவையின் செயல்பாடு குறித்து நிருபர்கள் கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு சொன்னார். 

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட கொள்கைகளை அமைச்சரவையும் தொடர்ந்து அமல்படுத்த முடியும் என முகமது ஸுக்கி தெரிவித்தார்.

கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பிரதமர்கள் ராஜினாமா செய்த முந்தைய நிர்வாக நிலையிலிருந்து தற்போதைய நிலைமை முற்றிலும் வேறுபட்டது என்றும் அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பதவி விலகியதும் அமைச்சரவை தானாகவே கலைக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

Pengarang :