ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

கோல சிலாங்கூரில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கடல் பெருக்கு அபாயம்

ஷா ஆலம், நவ 22- வெள்ளத்தில் பாதிக்கப்படுவோரை தங்க வைப்பதற்காக கோல சிலாங்கூர், பண்டார் பாரு, எம்.பி.கே.எஸ் மண்டபத்தில் இன்று மேலும் ஒரு  தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டது.

இந்த மாவட்டத்தில் இதுவரை நான்கு துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 167 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

பண்டார் பாரு எம்.பி.கே.எஸ். மண்டபத்தில் புதிதாக துயர் துடைப்பு மையம் இன்று திறக்கப்பட்ட நிலையில் அதில் கம்போங் தஞ்சோங் சியாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒன்பது குடும்பங்கள் தங்க வைக்கப்ட்டுள்ளன. பண்டார் பாரு தேசிய பள்ளியில் மூன்று தினங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட துயர் துடைப்பு மையத்தில் கம்போங் அசகானை சேர்ந்த 30 குடும்பங்கள் தங்கியுள்ளன என்றார் அவர்.

தொடர்ந்து பெய்துவரும்  அடை மழை  அதே வேளையில் கடல் பெருக்கும் ஏற்படுவதால் சுங்கை சிலாங்கூர் ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்து ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் புகுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவதற்காக மூன்று நீர் இறைப்பு சாதனங்கள் கம்போங் அசகானில் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

இதனிடையே, வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடல் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் அதே வேளையில் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறவும் எந்நேரமும் தயாராக இருக்கும்படி வட்டார மக்களுக்கு ஜூய்ரியா ஆலோசனை கூறினார்


Pengarang :