ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

புதிய அரசாங்கம் அமைக்கும் விவகாரம்- மலாய் ஆட்சியாளர்கள் நாளை சந்திப்பு

கோலாலம்பூர், நவ 23- புதிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் மலாய் ஆட்சியாளர்களின் கருத்தைப் பெறுவதற்காக மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா நாளை அவர்களுடன் சிறப்பு சந்திப்பை நடத்த விருக்கிறார்.

இஸ்தானா நெகாராவில் நாளை சிறப்பு மலாய் ஆட்சியாளர்கள் கூட்டம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யும்படி மாமன்னர் பணித்துள்ளதாக இஸ்தானா நெகாரா சிறப்பு அதிகாரி டத்தோஸ்ரீ அகமது பாடில் சம்சுடின் கூறினார்.

நாடு மற்றும் மக்களின் நலன் மற்றும் சுபிட்சத்திற்காக சரியான முடிவை எடுக்கும் விவகாரத்தில் மலாய் ஆட்சியாளர்களின் கருத்தைப் பெறும் நோக்கில் இந்த சந்திப்பை மாமன்னர் நடத்துகிறார் என அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கத்தை அமைக்கும் பணி முற்றுப் பெறும் வரை பொறுமை காக்கும்படி நாட்டு மக்கள் அனைவரையும் பேரரசர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அகமது பாடில் தெரிவித்தார்.

நாம் இரத்தம் சிந்திய நாட்டின் எதிர்காலம் மிகவும் முக்கியமானது என்பதால் நாம் மிகவும் கவனமாகவும் விவேகத்துடனும் திட்டமிட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சரவா கட்சிகளின் கூட்டணி (ஜி.பி.எஸ்.) நாடாளுன்ற உறுப்பினர்களை மாமன்னர் தனித்தனியாக சந்தித்தப் பின்னர் இந்த ஆட்சியாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிகளின் தலைவர்களைச் சந்திக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு இஸ்தானா நெகாராவில் நடைபெற்றது.


Pengarang :